டிரெண்டிங்

வேலூரில் தேர்தல் ரத்தாகுமா ? தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

வேலூரில் தேர்தல் ரத்தாகுமா ? தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

Rasus

வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்படுமா என்பது பற்றி தேர்தல் ஆணையமே முடிவெடுக்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

இன்று காலை முதலே காட்பாடியை அடுத்த பள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள திமுக பகுதிச் செயலாளர் பூஞ்சோலை சீனிவாசன் என்பவர் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கீழ்மேட்டூர் பகுதியில் உள்ள சீனிவாசனின் சகோதரியின் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது. காட்பாடி வஞ்சூர் பகுதியிலுள்ள திமுக ஒன்றியச் செயலாளர் பெருமாள் என்பவருக்குச் சொந்தமான வீட்டிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 
திமுகவின் வேலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் கதிர் ஆனந்த்திற்குச் சொந்தமான பொறியியல் கல்லூரியிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

இதனிடையே சிமெண்ட் குடோனிலிருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தப் பணம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மிஷினை வைத்து பணத்தை எண்ணும் பணியும் தற்போது தொடங்கியுள்ளது.

இந்நிலையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பதிலளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, வருமான வரித்துறை அளிக்கும் அறிக்கை தலைமை தேர்தல் ஆணையருக்கு அனுப்பப்படும். தேர்தல் ரத்து செய்யப்படுமா என்பது குறித்து தேர்தல் ஆணையமே முடிவெடுக்கும் என கூறியுள்ளார். வேலூரில் ஆதாரம், ஆவணங்கள் அடிப்படையிலேயே சோதனை நடைபெற்றதாவும் அவர் கூறியுள்ளார்.