டிரெண்டிங்

தேர்தல் விதிமீறல்: அதிமுக தேர்தல் அறிக்கை சுவரொட்டிகளை கிழித்த பறக்கும்படையினர்

kaleelrahman

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தேர்தல் விதிமுறைகளை மீறி அதிமுக தேர்தல் அறிக்கை சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக வந்த புகாரை அடுத்து பறக்கும்படையினர் நகராட்சி ஊழியர்களுடன் சுவொரொட்டிகளை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நன்நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள காவலன் கேட் அருகில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாசகங்கள் அடங்கிய மாபெரும் சுவரொட்டிகள் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேர்தல் அலுவலருக்கு புகார் வந்தது. இதையடுத்து தேர்தல் அலுவலர் உத்தரவின் பேரில் பறக்கும்படை குழுவினர், ஓட்டபட்ட சுவரொட்டிகளை கிழிக்கும் பணியில் காஞ்சிபுரம் பெருநகராட்சி ஊழியர்களை ஈடுபடுத்தி பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அனைத்தையும் அழித்தனர்.

இதுகுறித்து அதிமுக தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த சிலர் தாங்கள் சுவரொட்டிகளை ஒட்ட சென்னை தலைமை அலுவலகம் சார்பாக அனுமதி பெற்றுள்ளதாகவும் அழிக்க வேண்டாம் எனக் கூறினர். ஆனால் தேர்தல் அலுவலர் அறிவுரையின்படி சுவரொட்டிகள் அனைத்தும் கிழிக்கப்பட்டது.