வேட்பாளர்கள் தங்கள் மீதான குற்ற வழக்கு விவரங்களை இன்று முதல் ஏப்ரல் 16 ஆம் தேதிக்குள் ஊடகங்களில் வெவ்வேறான நாட்களில் 3 முறை விளம்பரப்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வேட்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கான வேட்புமனுத் தாக்கல் முடிந்து வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. அதில் அதிமுக, திமுக கூட்டணி வேட்பாளர்கள், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள், அமமுக வேட்பாளர்கள், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என ஏராளமானோர் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளில் 845 பேர் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக கரூரில் 42 பேரும், தென்சென்னையில் 40 பேரும் போட்டியிடுகின்றனர். மேலும் 18 தொகுதி இடைத்தேர்தலில் 269 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களை, தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாளில் விளம்பரம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய அறிவுரைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேட்பாளர் ஒருவர், தம்மீதான குற்ற வழக்குகள் குறித்து, செய்தித்தாளில் இருமுறையும், தொலைக்காட்சியில் ஒரு முறையும் விளம்பரம் செய்ய வேண்டும். விளம்பரங்களை இன்று முதல் ஏப்ரல் 16ஆம் தேதிக்குள் வெவ்வேறான நாட்களில் வெளியிடப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் சுயவிவரங்கள் குறித்த தகவல்களை, வாக்காளர்கள் அறிந்து கொள்வதற்காக இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.