ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் மற்றும் டிடிவி தினகரன் மீது போலீஸில் புகார் தர தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணம் கொடுத்தது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம் அளித்த பதிலில் இது தெரியவந்தது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் வேலுமணி, செல்லூர் ராஜு, விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தது. மேலும் அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீதும் வழக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வைரக்கண்ணன் என்பவர் கேட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம் இவ்வாறு பதிலளித்தது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்தது தொடர்பான வழக்கு நாளை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், போலீஸில் புகார் தர தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.