டிரெண்டிங்

பாஜக மூத்த தலைவர் முக்தர் அப்பாஸை எச்சரித்த தேர்தல் ஆணையம்

webteam

மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான முக்தர் அப்பாஸ் நக்வி‘மோடி கி சேனா’ எனக் கூறியதற்கு தேர்தல் ஆணையம் அவரை எச்சரித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அரசியல் தலைவர்கள் தீவரமாக ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் கடந்த 3ஆம் தேதி ராம்பூரில் நடந்த பிரச்சாரத்தில் மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி பங்கேற்றார். அப்போது அவர், ராணுவத் துறையினரை பற்றி பேசுகையில் ராணுவத்துறையே மோடியின் சேனைகள் எனப் பொருள்படும் வகையில் ‘மோடி கி சேனா’என்ற வார்த்தையை பிரயோகப்படுத்தியிருந்தார்.

இதனையடுத்து ராம்பூர் தொகுதியின் மாவட்டத் தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்தை விதிமுறைகளை நக்வி மீறிவிட்டதாக நோட்டீஸ் அளித்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக நக்வி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியது.

இந்நிலையில் தற்போது தேர்தல் ஆணையம் இதுகுறித்து நக்வியை எச்சரித்துள்ளது. இதற்காக பிறப்பித்த ஆணையில், “தேர்தல் ஆணையம் முக்தர் அப்பாஸ் நக்வி பேசிய வீடியோ பதிவை ஆராய்ந்து பார்த்தது. அதில் பயன்படுத்தியுள்ளது தெளிவாகியுள்ளது. இதனால் அவரை தேர்தல் ஆணையம் எச்சரிக்கிறது. மேலும் வருங்காலத்தில் அவர் ராணுவத்தை குறிக்கும்  போது இதுபோன்ற வார்த்தைகள் பயன்படுத்தக் கூடாது. அத்துடன் அரசியல் ஆதாயங்களுக்கு ராணுவத்தை பயன்படுத்துவதை தடுக்கவேண்டும்” என அறிவுறுத்தியுள்ளது.