அதிமுக கூட்டணியில் தஞ்சை தொகுதியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரசுக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1996 சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசின் தேசியத் தலைவர் பி.வி.நரசிம்ம ராவ் அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியிலிருந்து வெளியேறிய ஜி.கே. மூப்பனார் "தமிழ் மாநில காங்கிரஸ்” என்ற புதிய கட்சியை உருவாக்கினார். பின்னர் திமுக-வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு 39 தொகுதிகளிலும், 2001 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகக் கூட்டணியில் இடம்பெற்று 23 இடங்களில் வென்றது. அதேபோல மக்களவை தொகுதிகளிலும் வெற்றிகண்டது. இந்த தேர்தல்களில் போட்டியிட்டபோது சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றது.
பின்னர் 2001-ல் மூப்பனாரின் மறைந்தபின், அவரது மகன் ஜி.கே.வாசன் தமாகாவை 2002-ல் இந்திய தேசியக் காங்கிரசுடன் இணைத்தார். மத்திய அமைச்சராக பதவிவகித்த நிலையில், 2014 காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) என்ற கட்சியை மீண்டும் தொடங்கினார். காங்கிரசுக்கு சென்ற எம்.எல்.ஏ.-க்கள், எம்.பி.-க்கள் மீண்டும் தன்னுடன் திரும்பிவிட்டதால் சைக்கிள் சின்னத்தையே தங்கள் கட்சிக்கான நிரந்தர சின்னமாக வழங்க தேர்தல் ஆணையத்திடமும், நீதிமன்றத்திலும் 2016-ஆம் ஆண்டிலிருந்து போராடி வருகிறார்.
இதையடுத்து மக்களவைத் தேர்தலில் மட்டும் சைக்கிள் சின்னத்தை பயன்படுத்த தமாகாவிற்கு தேர்தல் ஆணையம் அனுமதியளித்தது. ஆனால் சைக்கிள் சின்னைத்தை நிரந்தரமாக ஒதுக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வழக்கு தொடர்ந்தார். நிரந்தரமாக சைக்கிள் சின்னத்தை ஒதுக்கவேண்டும் என்பது விரிவான கோரிக்கை என்பதால், அதில் அவசரமாக முடிவெடுக்க முடியாது எனக் கூறி ஜூன் முதல் வாரத்திற்கு வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.
இந்நிலையில், அதிமுக கூட்டணியில் தஞ்சை தொகுதியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் நடராஜனுக்கு ஆட்டோ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.
மக்களின் அவசரத்தேவைக்கு இருப்பது ஆட்டோ எனவும் கடின உழைப்பின் சின்னம் அது எனவும் தமாகா தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் ஆட்டோ சின்னம் வெற்றி சின்னம் எனவும் அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். திங்கள் கிழமையில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாகவும் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.