டிரெண்டிங்

அதிமுக, இரட்டை இலை யாருக்கு?: இன்று இறுதி விசாரணை

அதிமுக, இரட்டை இலை யாருக்கு?: இன்று இறுதி விசாரணை

webteam

அதிமுகவின் கட்சிப் பெயர் மற்றும் இரட்டை இலைச் சின்னம் யாருக்குச் சொந்தம் என்பதை தீர்மானிக்கும் விவகாரத்தில், தேர்தல் ஆணையம் இன்று மாலை 3 மணிக்கு இறுதி விசாரணை நடத்துகிறது.

இது தொடர்பாக ஈபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பு, டிடிவி தினகரன் மற்றும் தீபா தரப்பில் தாக்கல் செய்யப்ட்ட பிரமாணப் பத்திரங்கள், அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி, தேர்தல் ஆணையர்கள் ஓம் பிரகாஷ் ராவத், சுனில் அரோரா முன்னிலையில் விசாரணை நடைபெறவுள்ளது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மத்திய அரசின் முன்னாள் தலைமை சட்ட ஆலோசகர் முகுல் ரோத்தகி ஆஜராகிறார்.

ஈபிஎஸ் - ஓபிஎஸ் அணிகள் சார்பாக அமைச்சர் சி.வி.சண்முகம், மைத்ரேயன், கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், மனுதாரர்களில் ஒருவரான கே.சி.பழனிசாமி உள்ளிட்டோர் டெல்லியில் ஏற்கனவே முகாமிட்டுள்ளனர். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று டெல்லி செல்லக்கூடும் என்று கூறப்படுகிறது. அதிமுக அம்மா அணியின் சார்பாக வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் ஆஜராகவிருக்கிறார். ஜெ.தீபா தரப்பில் யாரும் டெல்லி செல்கிறார்களா என்பது பற்றிய தகவல் தெரியவில்லை. விசாரணைக்கு பின்னர் தேர்தல் ஆணையத்தின் முடிவு ஒரு வாரத்தில் அறிவிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.