டிரெண்டிங்

நான் உழைப்பால் உயர்ந்தவன்; உங்களை போல அல்ல- ஸ்டாலின் மீது முதல்வர் பழனிசாமி சாடல்

நான் உழைப்பால் உயர்ந்தவன்; உங்களை போல அல்ல- ஸ்டாலின் மீது முதல்வர் பழனிசாமி சாடல்

webteam

உழைப்பால் உயர்ந்த தனக்கு திமுக தலைவர் ஸ்டாலினை விட நூறு மடங்கு பலம் அதிகம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

மக்களவை மற்றும் இடைத்தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்களின் பரப்புரை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்றும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.

மக்களவை துணை சபாநாயகரும், கரூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளருமான தம்பிதுரையை ஆதரித்து புதுக்கோட்டையில் வாக்குசேகரித்தார். அப்போது பேசிய அவர் திமுக தலைவர் ஸ்டாலின் தமது தந்தையின் பின்புலத்தால் வளர்ந்தவர் என்றும், ஆனால் தானோ உழைப்பால் உயர்ந்து முதல்வராகி உள்ளதாகவும் தெரிவித்தார். உழைப்பால் உயர்ந்த தங்களுக்கு ஸ்டாலினை விட தங்களுக்கு நூறு மடங்கு பலம் அதிகம் என்றும் அவர் கூறினார் 

இதேபோல், எதிர்வரும் மக்களவைத் தேர்தல் என்பது சர்வாதிகார ஆட்சிகளை வீட்டுக்கு அனுப்புவதற்கான தேர்தல் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

அரக்கோணம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சன் மற்றும் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் அசோகனை ஆதரித்து,  திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், இந்துக்களுக்கு திமுக எதிரி என்பது போன்ற தோற்றத்தை சிலர் ஏற்படுத்தி வருவதாக குற்றஞ்சாட்டினார்.

தென்சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியனை ஆதரித்து, கண்ணகி நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் மத்திய அரசுக்கு எந்த அழுத்தமும் கொடுக்காமல் இருந்துவிட்டு, தேர்தல் நேரம் என்பதால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என மக்களை அதிமுக ஏமாற்ற நினைப்பதாக சாடினார்.

ராணுவத்தின் செயல்பாடுகளையும், விஞ்ஞானிகளின் சாதனைகளையும் பிரதமர் நரேந்திர மோடி அரசியலாக்கி வருவதாக குற்றஞ்சாட்டிய திமுக தலைவர் ஸ்டாலின், மத்தியிலும், தமிழகத்திலும் நடைபெற்று வரும், மக்கள் விரோத, சர்வாதிகார, எதேச்சதிகார ஆட்சிகள் இத்தேர்தல் மூலம் அகற்றப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். விரைவில் அனைத்து தரப்பினர் ஆதரவுடன் திமுக ஆட்சி மலரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.