டிரெண்டிங்

லோக்கல் ரயிலில் கவனம் ஈர்த்த பாட்டி.. பண உதவியை மறுத்து நெகிழ்ச்சி!

JustinDurai

மும்பை உள்ளூர் ரயிலில் வயதான பெண் ஒருவர் தின்பண்டங்கள் விற்கும் வீடியோ வைரலாகி வந்த நிலையில் அவருக்கு உதவ தன்னார்வ தொண்டு நிறுவனம் முன்வந்தபோது அதனை ஏற்க மறுத்து விட்டார்.

டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் அண்மையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்று நெட்டிசன்களின் கவனத்தைப் பெற்றது. அந்த வீடியோவில் மும்பை உள்ளூர் ரயிலில் வயதான பெண்மணி ஒருவர் சுடிதார் அணிந்து பயணிகளுக்கு சாக்லேட் உள்ளிட்ட நொறுக்குத்தீனிகள் விற்கிறார். 'மாடர்ன்' தோரணையுடன் இருக்கும் அந்த வயதான பெண் பயணிகளிடம் கனிவாகப் பேசி, தான் கொண்டு வந்திருக்கும் ஸ்நாக்ஸ்களை விற்கிறார்.

தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியுடன் இருக்கும் அந்த மூதாட்டியை நெட்டிசன்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். சிலர் அந்த மூதாட்டிக்கு தேவையான உதவிகளை செய்வதற்காக அவருடைய தொடர்பு விபரங்கள் கேட்டு பதிவிட்டுள்ளனர்.  இந்நிலையில் அந்த மூதாட்டியை நீண்ட தேடுதலுக்குப் பின் கண்டுபிடித்த ஹேம்குண்ட் அறக்கட்டளையை சேர்ந்த ஹர்தீரத் சிங் அலுவாலியா அவருக்கு பண உதவி வழங்க முன்வந்தார். ஆனால் அந்த பணத்தை வாங்க மூதாட்டி மறுத்துவிட்டார். இதையடுத்து அந்த மூதாட்டி விற்கும் சாக்லேட்டுகள் அனைத்தையும் ஹர்தீரத் சிங் அலுவாலியா பணம் கொடுத்து வாங்கிக்கொண்டார். இதனால் அந்த மூதாட்டி மீதான  மரியாதை மேலும் அதிகரித்திருக்கிறது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: ஷாக்கிங் வீடியோ: பெண்ணின் காதுக்குள் புகுந்த பாம்பு.. திக் திக் நிமிடங்கள்