திமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தில்லு முல்லு செய்கிறார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சூலூர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து, முதலமைச்சர் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “ஸ்டாலினும், டிடிவி தினகரனும் வெளியே எதிரி போல் காட்டிக் கொண்டு, ரகசிய கள்ளத்தொடர்பு வைத்துள்ளனர். சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றால், அந்தக் கட்சியின் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை தான் உயருமே தவிர, மக்கள் பிரச்னை தீராது. தனது கட்சியின் வேட்பாளர் வெற்றிக்கு பாடுபடாமல், அதிமுகவின் வெற்றியைத் தடுக்கவே தினகரன் செயல்படுகிறார். அவருக்கு இந்த தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.
திமுகவும் அமமுகவும் கூட்டு என்பதை தங்க தமிழ்செல்வன் வெளியே போட்டு உடைத்துவிட்டார். ஏற்கனவே 18 எம்.எல்.ஏக்கள் டிஸ்மிஸ் தொடர்பாக ஸ்டாலின் வழக்கு போட்டபோது அவர்களுடன் இணைந்து வெற்றிவேலும் வழக்கு போட்டார் என்பதை நினைத்து பார்க்க வேண்டும்.
அதிமுக ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட ஏழை, எளிய மக்களின் நலன் காக்க உருவாக்கப்பட்ட இயக்கம். திமுக குடும்பத்திற்காக உருவாக்கப்பட்ட இயக்கம். அது ஒரு கட்சி இல்லை, கம்பெனி. அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட உயர்ந்த நிலைக்கு வரமுடியும் என்பதற்கு நானே உதாரணம்” என பேசினார்.