எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சியை முறியடித்து தேர்தலில் வெற்றிபெற்று அதனை மறைந்த முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு காணிக்கையாக்குவோம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வலியுறுத்தி உள்ளனர்.
அதிமுக தொண்டர்களுக்கு இருவரும் கூட்டாக எழுதியுள்ள மடலில், மக்களவை மற்றும் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் வெற்றி என்ற உறுதியோடு பனியாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மக்களிடம் எடுத்துச் சொல்ல சாதனைகள் ஏதும் இல்லாததால் அதிமுக மீதும், தமிழக அரசு மற்றும் பிரதமர் மோடி மீதும் தரம் தாழ்ந்த விமர்சனங்களைத் தொடுப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் அதிமுக ஆட்சியின் சாதனைகள், மீட்டெடுத்த உரிமைகளை வீடு வீடாக மக்களிடம் அதிமுகவினர் எடுத்துச் சென்று மிகுந்த விழிப்போடு களப்பணியாற்றிட வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
மேலும், அதிமுக தொண்டர்கள் அனைவரும் தற்போது ஒவ்வொரு விநாடியும் உன்னதமானவை என்பதை உணர்ந்து செயல்பட்டு மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் முழுமையான அளவில் வெற்றி பெற்று மறைந்த முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு காணிக்கையாக்கக வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.