டிரெண்டிங்

“உள்ளாட்சித் தேர்தலை கண்டு மு.க.ஸ்டாலின் அச்சப்படுகிறார்” - முதல்வர் பழனிசாமி

webteam

உள்ளாட்சித் தேர்தலை கண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அச்சப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் இருந்து 6 பேர் உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். புதிய மாவட்டங்களில் தொகுதி வரையறை செய்யாமல் தேர்தலை நடத்தினால் நாங்கள் பாதிக்கப்படுவோம் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனியையே உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அதில், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன் தொகுதி மற்றும் வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை பூர்த்தி செய்ய தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் ஏற்கெனவே தொகுதி மறுவரையறை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இன்னும் இறுதி தீர்ப்பு வரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் 37ஆவது மாவட்டமாக செங்கல்பட்டு மாவட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசின் பல்வேறு திட்டங்களுக்கு சிலர் முட்டுக்கட்டை போடுவதாக கூறினார். மேலும் உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போடவே திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.