கஜா புயல் நிவாரண பணிகள் குறித்து குற்றம்சாட்டும் எதிர்க்கட்சிகள், ஆக்கப்பூர்வமான வழிவகைகளை கூறினால், அதனை முன்னெடுக்க அரசு தயாராக இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் ரூ. 198 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தொடங்கி வைத்தார். அவருடன் அமைச்சர் வேலுமணியும் மாவட்ட ஆட்சியர் ரோகினியும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் சேலம் பழைய பேருந்து நிலையத்தை புணரமைத்து புதிய ஈரடுக்கு பேருந்து நிலையம் கட்டப்பட உள்ளது. அதன்படி ரூ. 92 கோடியில் ஈரடுக்கு பேருந்து நிலையம் அமைக்க நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர், அமைச்சர்களுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதால் அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்தார். மேலும் விபத்துகளை குறைக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும், எட்டு வழிச்சாலை முக்கியம் எனவும் எட்டு வழிச் சாலைக்கு நிலம் கொடுப்பவர்களுக்கு அதிகளவில் இழப்பீடு வழங்கப்படுவதாகவும் தெரிவித்த அவர், இத்திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ஓராண்டுக்கு 17 லட்சம் வாகனங்கள் சாலையில் பயணிப்பதாகவும் அதனால் அதிகமாக விபத்துகள் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் கஜா புயல் நிவாரண பணிகள் குறித்து குற்றம்சாட்டும் எதிர்க்கட்சிகள், ஆக்கப்பூர்வமான வழிவகைகளை கூறினால், அதனை முன்னெடுக்க அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.