டிரெண்டிங்

எடப்பாடி சட்டமன்ற தொகுதி : அரசியல் கட்சிகளின் பிரச்சார வியூகங்கள் பற்றிய அலசல்

Veeramani

தமிழகத்தில் நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ள எடப்பாடி தொகுதியின் வேட்பாளர்கள் எத்தகைய வியூகங்களை அமைத்து களப்பணியாற்றி வருகின்றனர் என்று விரிவாக பார்க்கலாம்.

முதலமைச்சர் தொகுதி என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ள எடப்பாடி, இந்த தேர்தலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இங்கு அதிமுக சார்பில் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக சார்பில் சம்பத்குமார், அமமுக சார்பில் பூக்கடை சேகர், மக்கள் நீதி மய்யம் சார்பில் தாசப்பராஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் ஸ்ரீரத்னா ஆகியோர் களத்தில் உள்ளனர்.

வெற்றிக்கனியை பறித்துவிட வேண்டும் என்ற நோக்கில் அனைத்து வேட்பாளர்களும் பல்வேறு வியூகங்களை அமைத்து களமாடி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி தனது தொகுதி மட்டுமின்றி தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அதனால் முதல்வருக்கு ஆதரவாக அவரது மைத்துனர் வெங்கடேசன் மற்றும் அதிமுக பேரூராட்சி ஒன்றிய செயலாளர்கள் நாள்தோறும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

20 வாக்காளர்களுக்கு ஒரு நபர் என்ற அடிப்படையில் மகளிர் பூத் கமிட்டியினர் திண்ணைப் பிரச்சாரமும் மேற்கொள்கின்றனர். 4 நாட்களுக்கு முன்பு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வருக்கு ஆதரவாக எடப்பாடியில் பரப்புரை மேற்கொண்டார். மேலும் பரப்புரையின் இறுதி நாளன்று பழனிசாமி, எடப்பாடி தொகுதி முழுவதும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.

திமுக : திமுக வேட்பாளர் சம்பத்குமார் சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வழிகாட்டுதலின் பேரில் நாள்தோறும் விவசாயிகள், நெசவாளர்கள், பலதரப்பட்ட தொழிலாளர்கள், 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் என அனைவரையும் நேரில் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். முதலமைச்சர் தொகுதி என்பதால் திமுகவினரும் சளைக்காமல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதலமைச்சர் மாவட்டம் என்பதாலும், மேற்கு மண்டலத்தில் அதிமுக கூட்டணி பலமாக இருக்கிற காரணத்தாலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பொதுக்கூட்டம் சேலத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஒரே மேடையில் உரையாற்ற உள்ளனர்.

மற்ற கட்சிகள் : எடப்பாடி தொகுதியை பொறுத்தவரை பிற கட்சி வேட்பாளர்களின் வாக்கு சேகரிப்பு பெரிய அளவில் கவனம் ஈர்க்கவில்லை என்றே சொல்லலாம். அமமுக வேட்பாளர் பூக்கடை சேகர், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் தாசப்பராஜ், நாம் தமிழர் வேட்பாளர் ஸ்ரீரத்னா ஆகியோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாலும், அதிமுக - திமுக ஆகிய கட்சிகளின் ஆதிக்கம் தான் தேர்தல் களத்தில் உள்ளது.