டிரெண்டிங்

திருப்பூர்: 4 மணிநேரம் நடந்த ஐடி ரெய்டு; கட்சி பிரமுகர்களின் வீட்டில் ரூ.8 கோடி பறிமுதல்

webteam

திருப்பூர் மாவட்டத்தில் திமுக, மதிமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சி நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட வருமானவரிச் சோதனையில், சுமார் 8 கோடி ரூபாய் சிக்கியிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் திமுக நகரச் செயலாளர் கே.எஸ்.தனசேகர், மதிமுக மாவட்ட துணைச் செயலாளரும் தொழிலதிபருமான கவின் நாகராஜ், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளர் சந்திரசேகர் ஆகியோரின் இல்லங்கள் மற்றும் அலுவலகங்களில் நேற்று மாலை வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

குறிப்பாக, சந்திரசேகருக்கு சொந்தமான திருப்பூர் லட்சுமி கேர் பிரிட்ஜ்வே காலனி பகுதியில் உள்ள பின்ளலாடை நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டது. இதேபோன்று திருப்பூரில் அனிதா ஹெல்த்கேர் மற்றும் டெஸ்காட் ஆகிய நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

திருப்பூர் மற்றும் தாராபுரம் பகுதிகளில் இரவு 11 மணி வரை சுமார் நான்கு மணி நேரம் நீடித்த சோதனையில், 8 கோடி ரூபாய் அளவுக்கு கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கவின் நாகராஜ் மற்றும் சந்திரசேகர் ஆகியோரது வீடுகள், அலுவலகங்களில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.

தாராபுரம் தொகுதியில் பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் எல்.முருகன் போட்டியிடும் நிலையில், இந்த வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்ய பொருளாளர் சந்திரசேகர் தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகளுக்கான பை மற்றும் கொரோனா முகக்கவசங்கள், கவச ஆடைகள் போன்றவற்றை தயாரித்து வழங்கி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.