டிரெண்டிங்

புதியதலைமுறை செய்தி எதிரொலி: மாற்றுத்திறனாளிக்கு உதவிக்கரம் நீட்டிய நல்லுள்ளங்கள்!!

kaleelrahman

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே இரண்டு கால்களை இழந்த மாற்றுத்திறனாளி வாழ்வாதாரம் இழந்து அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாமல் பரிதவித்து வருவது குறித்து புதிய தலைமுறையில் செய்தி வெளியானது. இச்செய்தியின் எதிரொலியாக ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாணவர்கள் சேவை மையம் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

முதுகுளத்தூர் அருகே மைக்கேல்பட்டிணம் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கராஜா என்பவர் ஜேசிபி இயந்திரம் ஆப்ரேட்டர் பயிற்சியை முடித்து பணி செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு பரமக்குடியில் ரயில் தண்டவாளத்தை கடக்கும்போது எதிர்பாராதவிதமாக தண்டவாளத்தில் கால்கள் மாட்டிக் கொண்டதால் ரயில் மோதி மாணிக்கராஜாவின் இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டது.


இதனால் ஜேசிபி ஆப்ரேட்டர் மூலம் கிடைத்த வருமானத்தை இழந்துள்ள மாணிக்கராஜாவின் குடும்பம் வறுமையில் வாழ்வாதாரம் இன்றி இருந்துள்ளது. இதையடுத்து மாணிக்கராஜாவின் தாயார் மெக்கலம்மாள் நாள்தோறும் கூலி வேலைக்கு சென்று அதன் மூலம் கிடைத்த வருமானத்தை வைத்து அவரது மகனான மாற்றுத்திறனாளியை பாதுகாத்து பராமரித்து வந்துள்ளார்.


இந்த நிலையில் தற்போது கொரோனா பொது முடகத்தால் கூலி வேலைக்கு செல்ல முடியாமல் மிகுந்த சிரமப்பட்டு வருவதால் மாற்று திறனாளியின் குடும்பம் அன்றாட அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாமல் சிரமப்பட்டு வந்தார்.


மாதந்தோறும் வழங்கக்கூடிய மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகையும் மாணிக்க ராஜாவுக்கு அரசு வழங்காததால் கடும் சிரமத்திற்கு உள்ளானார். இது குறித்து புதிய தலைமுறையில் செய்தி வெளியிட்டதன் எதிரொலியாக திமுக ஒன்றிய கவுன்சிலர் லெட்சுமி முத்துராமலிங்கம் தனது சொந்த பணத்தில் அரிசி, பருப்பு, மைதா, கோதுமை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவி செய்தார்.


இதேபோல மாணவர்கள் சேவை மையம் சார்பில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினர். இதனால் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கும், உதவிகரம் நீட்டியவர்களுக்கும் மாற்றுத் திறனாளி மாணிக்கராஜா நன்றி தெரிவித்துள்ளார்