டிரெண்டிங்

சர்ச்சை பேச்சு: மேனகா காந்திக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்!

webteam

மத்திய அமைச்சர் மேனகா காந்திக்கு தேர்தல் ஆணையம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி போட்டியிடுகிறார். கடந்த 14 ஆம் தேதி சர்கோடா கிராமத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் ’’நான் இந்தத் தொகுதியில் வெற்றி பெறுவது உறுதி. இந்த வெற்றியில் இஸ்லாமியர்களின் பங்கு இல்லாவிட்டால் அது நன்றாக இருக்காது. நல்லது நடக்க வேண்டும் என்றால் இஸ்லாமியர்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும். எனக்கு வாக்களித்தால்தான் அவர்களுக்கு உதவி செய்வேன். இது ஒரு வகையில் கொடுத்து வாங்கும் கொள்கை போன்றதுதான்’’ என்று கூறினார்.

மேனகா காந்தியின் இந்தப் பேச்சு சர்ச்சையானது. இதற்கு காங்கிரஸ் கட்சியில் செய்தி தொடர்பாளர் சஞ்சய் கான், “மேனகா காந்தியின் இந்தப் பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. வாக்களிக்க மக்களை வற்புறுத்துவது தவறு. தேர்தல் ஆணையம் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மேனகா காந்தியின் பேச்சுக்கு தேர்தல் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தேர்தல் பரப்புரையில்  இதுபோன்ற பேச்சுகளை இனி பேசக்கூடாது என்றும் அவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் எச்சரித்துள்ளது.