திமுக பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்
முதுபெரும் அரசியல் தலைவரும் திமுக பொதுச் செயலாளருமான க.அன்பழகன் வயது முதிர்வு காரணமாக காலமானார். இதனை அடுத்து திமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். அதனால் தற்போது துரைமுருகன் வகித்துவரும் பொருளாளர் பதவியில் இருந்து அவர் விலக விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அதனை தான் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
மேலும் மார்ச் 29-ம் தேதி பொதுச்செயலாளர் தேர்தலுடன் பொருளாளர் பதவிக்கும் தேர்தல் நடைபெறும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறவில்லை. இந்நிலையில் திமுக பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.
இது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், கொரோனோ அச்சுறுத்தும் தேரத்தில் பொதுக்குழுவைக் கூட்டி பொதுச்செயலாளர்- பொருளாளர் பதவிகளுக்கு தேர்வு செய்ய முடியாத அசாதாரண சூழ்நிலை உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு துரைமுருகன் கொடுத்த ராஜினாமா குறித்து நான் எடுத்த நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து அவரே பொருளாளர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார் என அறிவிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.