டிரெண்டிங்

”என்ன கடிச்ச பாம்பு செத்துருச்சு” -இறந்த கிங் கோப்ராவுடன் மருத்துவமனைக்கு வந்த போதை ஆசாமி!

JananiGovindhan

இந்தியாவின் பல ஊர்களில் அண்மைக் காலமாக பொதுவெளியில், குடியிருப்பு பகுதிகளில் கொடிய நச்சு பாம்புகள் உலா வருவது சமூக வலைதளங்கள் வாயிலாக பகிரப்பட்டு பலரையும் பீதி அடைய வைக்கிறது.

இப்படி இருக்கையில், உத்தர பிரதேசத்தின் குஷிநகரைச் சேர்ந்த சலாவுதீன் மன்சூரி என்ற நபர் தன்னை கடித்த பாம்பு இறந்துவிட்டதாகவும், பாம்பு கடிக்கும் வைத்தியம் பார்க்கச் சொல்லியும் மருத்துவமனைக்கு இறந்த அந்த பாம்புடன் வந்து பீதியை கிளப்பியிருக்கிறார்.

அதன்படி, 35 வயதான சலாவுதீன் மன்சூரியின் காலில் கிட்டத்தட்ட 3 அடி நீளமுள்ள நாகப்பாம்பு இருமுறை கடித்து காயம் ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் குடி போதையில் இருந்த சலாவுதீன் உயிரோடு இருந்த நிலையில், கடித்த அந்த பாம்பு இறந்திருக்கிறது.

பொதுவாக கிங் கோப்ரா என சொல்லக் கூடிய ராஜ நாகங்கள் 18 அடி நீளம் வரை வளரக் கூடியவை. ராஜ நாகங்கள் கடித்தால் பக்க வாதத்தையே ஏற்படுத்தக் கூடும். சமயங்களில் 15 முதல் 20 பேரை கொல்லும் ஆற்றல் நாகப்பாம்புகளுக்கு இருக்குமாம்.

இப்படி இருக்கையில் சலாவுதீனை கடித்த பாம்பு இறந்திருப்பது பெரும் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கின்றன. இதனையடுத்து, இறந்த பாம்பை ஒரு பாலிதீன் பையில் போட்டு குஷிநகரில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார் சலாவுதீன்.

போதையில் இருந்த சலாவுதீன் தனக்கு நடந்ததை மருத்துவர்களிடம் விவரித்ததோடு, பாம்பு கடிக்கு சிகிச்சை அளிக்குமாறும் கேட்டிருக்கிறார். இதனைக் கேட்ட மருத்துவர்கள் அதிர்ந்து போயிருக்கிறார்கள்.

மேலும், பத்ரெளனா ரயில் நிலையம் வழியாக வீடு திரும்பிய போது போதையில் இருந்த சலாவுதீனை அந்த பாம்பு தீண்டியிருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், பாம்பை சரமாரியாக தாக்கியிருக்கிறார். இதனையடுத்து, சலாவுதீன் குடிபோதையில் தனது சகோதரனைச் சந்தித்தார். அவரது சகோதரர் நடந்ததை கேட்டதும், விஷ முறிவுக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு சலாவுதீனை அழைத்துச் சென்றிருக்கிறார். தற்போது அது தொடர்பான வீடியோதான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.