காரைக்குடி அருகே புதுவயலில் கால்வாய் வழியாக செல்லும் கழிவு நீர் கால்வாய் உடைபட்டு குடிநீரில் கலப்பதாக புகார் எழுந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ளது புதுவயல். பேரூராட்சி அந்தஸ்தை கொண்ட புதுவயலில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்நிலையில், 8வது வார்டு பகுதியில் செல்லும், கழிவு நீர் கால்வாய் சேதமடைந்த போனது. அதிலிருந்து வெளியேறும் கழிவு நீர், குடிநீர் குழாயில் கலந்து வருகின்றது. மேலும் துர்நாற்றம் அதிகமாகி குழந்தைகளுக்கு அடிக்கடி நோய் தொற்று ஏற்பட்டு வருகிறது.
குடிநீரை அருந்த முடியாத அளவுக்கு சுகாதார சீர்கேட்டில் வசிப்பதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து, பேரூராட்சி செயலர், மாவட்ட ஆட்சியர், முதலமைச்சரின் தனி பிரிவு என அனைவரிடமும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என கவலை தெரிவிக்கின்றனர் அப்பகுதிவாசிகள். இனி மேலாவது எங்களின் சுகாதாரம் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, கழிவு நீர் கால்வாய் சீரமைப்புப் பணி குறித்து மறு மதிப்பீடு செய்யப்பட்டு உடனடியாக சீரமைக்கப்படும் என்று தெரிவித்தனர்.