தமிழகத்தில் ஊழல் அமைச்சர்களின் பட்டியல் ஒரு டஜனைத் தாண்டி விட்டது என்றம் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்காவிட்டால் திமுக சார்பில் வழக்கு தொடரப்படும் என்றும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக அமைச்சரவையில் ஊழல் அமைச்சர்களின் பட்டியல் ஒரு டஜனை தாண்டிவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார். ஊழல் அமைச்சர்களால் தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லை. தொழில்வளர்ச்சி இல்லை. தொழில் முதலீடுகள் வேறு மாநிலங்களுக்குச் சென்றுவிட்டது எனவும் எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் இல்லாமல் தமிழகம் தத்தளித்துக் கொண்டிருப்பதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களின் போராட்டங்களை குண்டர் சட்டம் மூலம் அரசு அடக்கப் பார்ப்பதாகவும், ஊழலில் உறைந்துவிட்ட சில போலீஸ் அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் ஊழல் அமைச்சரவைக்கு துணை போவதாகவும் ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
குட்கா வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சுட்டிக்காட்டியது போல, லஞ்ச ஒழிப்புத்துறையும், மாநில விழிப்புணர்வு ஆணையமும் இணைந்து சுதந்திரமான அமைப்பை இனியும் காலதாமதம் செய்யாமல் ஏற்படுத்த வேண்டும் என்று முதலமைச்சரை கேட்டுக் கொள்வதாகவும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். லோக் ஆயுக்தாவை அமைக்கத் தவறினால் ஊழல் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீதான புகார்களை விசாரிக்க லோக் ஆயுக்தா அமைக்க வலியுறுத்தி விரைவில் நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.