மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வாட்ஸ்-அப் குரூப் அமைத்து டோர் டெலிவரியில் விற்பனை செய்த வாலிபர் அதிரடி கைது செய்யப்பட்டார்.
தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அரசு மதுபான கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி சிலர் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்து வருகின்றனர்.
உசிலம்பட்டியை சேர்ந்தவர் தங்கராமன். இவர், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள சிக்கந்தர் சாவடி பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்துள்ளார். ஒருபோன் செய்தால் போதும் மதுபாட்டில் வீடுதேடி வரும் என தனது நண்பர்களுக்கு வாட்ஸ்- அப்பில் தற்காலிக குழு அமைத்து அதன் மூலம் விளம்பரம் செய்து மதுபாட்டில்களை டோர் டெலிவரி முறையில் விற்பனை செய்துள்ளார்.
இது குறித்து புகார் எழுந்ததை தொடர்ந்து அலங்காநல்லூர் போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து போலீசார் உடனடியாக வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு மதுபாட்டில்களை வாங்குவதுபோல் நடித்து வாலிபரை கையும் களவுமாக பிடித்தனர். பிடிபட்ட தங்கராமனிடம் 76 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.14,680 ரூபாயை பறிமுதல் செய்த அலங்காநல்லூர் போலீசார் தங்கராமனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.