டிரெண்டிங்

”பாதுகாப்பு கொடுக்க வேண்டிய நீயே..” உலகின் பயனற்ற நாய் எது தெரியுமா? வைரல் வீடியோ பின்னணி!

JananiGovindhan

விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான பீஸ்ட் படத்தில் மால் காவலாளியான முதியவர் ஒருவர் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக டேபிள் ஒன்றின் கீழ் மறைந்து பத்திரமாக இருப்பார். அப்போது வி.டி.வி. கணேஷ் அந்த காவலாளியை பார்த்து “பாதுகாப்பு கொடுக்க வேண்டியவனே பாதுகாப்பா இருக்கான்” என வசனம் பேசுவார்.

அப்படியான சம்பவம் ஒன்று தாய்லாந்தில் உள்ள நகைக் கடையில் நடந்திருக்கிறது. அதில், நகைக்கடை உரிமையாளர் ஒருவர் தான் வளர்க்கும் நாயின் திறனை சோதிப்பதற்காக ஒரு முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். ஆகையால் தன்னுடைய நகைக் கடையில் போலி கொள்ளை சம்பவத்தை நடத்தியிருக்கிறார்.

அதன்படி, லக்கி என்ற நாயை சோதிக்க கையில் ஆயுதம் ஏந்திய போலி கொள்ளையனை விட்டு தனது நகைக் கடையில் வந்து மிரட்டச் செய்திருக்கிறார் அந்த உரிமையாளர் லோம்வானாவோங்.

கொள்ளையனாக நடித்த அந்த நபர் சத்தம் போட்டுக்கொண்டு கடைக்குள் நுழைந்து மிரட்டி கை நிறைய மோதிரம், பிரேஸ்லெட், நெக்லஸ் என அனைத்து நகையையும் எடுத்துச் சென்றார். ஆனால் அந்த லக்கி நாயோ இத்தனை களேபரங்கள் நடந்தும் தன்னுடைய உரிமையாளரை காப்பாற்ற வேண்டும் என்றிருக்காமல் எனக்கென்ன என தூங்கிக் கொண்டிருந்திருக்கிறது.

இது குறித்து அறிந்த போலீசார் சம்பந்தபட்ட கடைக்கு சென்று விசாரித்த போது நாய்க்கு பயிற்சி அளிப்பதற்காகவே இந்த போலி கொள்ள நடத்தப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுபோக உலகின் மிகவும் பயனற்ற நாயாக இது இருப்பதாகவும் அதன் உரிமையாளர் கூறியிருக்கிறாராம்.

போலி கொள்ளை நடந்த போதும் அதை சட்டைசெய்யாமல் தூங்கிக் கொண்டிருந்த நாயின் செயல் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது. இதனைக் கண்ட நெட்டிசன்கள் பலரும், “என் அப்பா போலி கொள்ளைதான் நடத்துகிறார் என தெரிந்துதான் நான் தூங்கிக் கொண்டிருந்தேன்” என லக்கி நாயின் மைண்ட் வாய்ஸாக கமெண்ட் செய்திருக்கிறார்கள்.