அரசியல் கட்சிகளுக்கு இரண்டு ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக நன்கொடை வழங்கக் கூடாது என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
பொதுவாக அரசியல் கட்சிகள் தங்களது கட்சி தொண்டர்களிடமும், பொதுமக்களிடமும் நன்கொடை வசூலிப்பது வழக்கம். குறிப்பாக தேர்தல் காலங்களில் வெளிப்படையாகவே அறிவிப்புகள் வெளியிடுவார்கள். இப்படி கட்சிக்கு நிதி திரட்டுவதற்கான கணக்குகளை முறையாக பராமரிப்பதில்லை என்று பல்வேறு கட்சிகள் மீது அவ்வவ்போது புகார்கள் எழுவதுண்டு.
இந்நிலையில், அரசியல் கட்சிகளுக்கு இரண்டு ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக நன்கொடை வழங்கக் கூடாது என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளை மற்றும் அரசியல் கட்சிகளுக்கு இது பொருந்தும். சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்வதை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"Go cashless, Go clean” என்ற வாசகத்தை வருமான வரித்துறை தனது அறிக்கையில் அடிக்கோடிட்டு குறிப்பிட்டுள்ளது. அதாவது பணமில்லா பரிவர்த்தனைக்கு மாற வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளது.