தேசிய அளவிலான கூட்டணிக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்த பின்னர் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைத்து காங்கிரஸ் தலைமையில் கூட்டணியை ஏற்படுத்த சந்திரபாபு நாயுடு திமுக தலைவர் ஸ்டாலினை இன்று சந்தித்து பேசினார்.
2019ம் ஆண்டு மக்களவை தேர்தலையொட்டி தேசிய, மாநில கட்சிகள் இடையே கூட்டணி குறித்து பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில் ஆந்திர மாநில முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கடந்த சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார். அந்தச் சந்திப்பின் போது பல்வேறு விஷயங்கள் குறித்தும் இருவரும் நீண்ட நேரம் ஆலோசனை செய்தனர். இதனையடுத்து வரும் 2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் - தெலுங்கு தேசம் கூட்டணியை சந்திரபாபு நாயுடு உறுதி செய்தார்.
இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினை சந்திரபாபு நாயுடு இன்று சந்தித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, திமுக பொருளாளர் துரைமுருகன், கனிமொழி, டி.ஆர்.பாலு ஆகியோர் உடனிருந்தனர்.
இந்தச் சந்திப்பின்போது நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்தும், நாட்டின் பல்வேறு பிரச்னைகள் குறித்தும் இருவரும் நீண்ட நேரம் ஆலோசனை செய்தனர்.
சந்திப்பு பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஸ்டாலின், “சந்திரபாபு நாயுடுவின் முயற்சிக்கு திமுக முழு ஆதரவை தெரிவித்துள்ளது. மத்தியில் நடக்கும் மக்கள் விரோத பாஜக ஆட்சியை வீழ்த்துவதற்காக இணைந்துள்ளோம். சிபிஐ, ஆர்பிஐ உள்ளிட்ட அமைப்புகள் சுதந்திரமாக செயல்படாத நிலை உள்ளது” என்று கூறினார்.
பின்னர் பேசிய சந்திரபாபு நாயுடு, “சிபிஐ, ஆர்பிஐ ஆகியவற்றின் பெருமையும் புகழும் குலைக்கப்படுகிறது. ஆளுநர்களை தங்கள் விருப்பத்துக்கு மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது. பணமதிப்பு நீக்கத்தால் கருப்பு பணம் வெள்ளையாக்கப்பட்டு விட்டது. காங்கிரசுடன் வேறுபாடு இருந்தாலும் ராகுல் காந்தியை சந்தித்தேன். ஏனெனில், ஜனநாயகத்தை காக்க காங்கிரஸ் உட்பட அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்” என்று கூறினார்.