அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த அதே வேளையில், டெல்லியில் இருந்து கொண்டு தமிழக அரசியலில் பரபரப்பை கூட்டினார் ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ.வான கு.க.செல்வம். அவர் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தது தான் அதற்கு காரணம். கு.க.செல்வம் பாஜக பக்கம் சாய்கிறார் என்று பேசப்பட்ட நிலையில், அதனை அவர் திட்டவட்டமாக மறுத்தார்.
தொகுதி மேம்பாடு குறித்து பேச டெல்லி வந்ததாக கூறிய அவர், தமிழ்க் கடவுள் முருகனை அவதூறாக பேசியவர்களை திமுக தலைவர் ஸ்டாலின் கண்டிக்கவில்லை என்றும், உள்கட்சி தேர்தலை ஸ்டாலின் முறையாக நடத்த வேண்டும் என்றும் கூறினார்.
இந்நிலையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வருவதாக கூறி கு.க.செல்வம் திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். மேலும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஏன் நீக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு அவருக்கு திமுக கடிதம் அனுப்பியுள்ளது.
கட்சியின் நடவடிக்கைக்கு பிறகு கு.க.செல்வம், பாஜகவின் மாநில தலைமையகமான கமலாலயத்திற்கு சென்றார். அவரை பாஜக மாநில நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், திராவிடக் கட்சிகளில் 50 ஆண்டுகால அனுபவம் பெற்ற தனக்கு வந்த நிலை வேறு யாருக்கும் வரக்கூடாது என்று கூறினார்.
கு.க.செல்வம் பாஜகவில் இணையவில்லை என்று பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி விளக்கம் அளித்ததுள்ளார். கு.க.செல்வத்தின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதனிடையே, ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் போன்றவர்கள் கட்சியை விட்டு பிரிந்து செல்வதால், திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மேலும், மன்னாதி மன்னர்கள் சென்ற போதே திமுக வலிமையுடன் இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.