டிரெண்டிங்

குதிரை போன பிறகு லாயத்தைப் பூட்டக் கூடாது: டி.கே.எஸ்.இளங்கோவன்

webteam

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் இந்த முறையாவது குதிரை போன பிறகு லாயத்தைப் பூட்டுவது போலல்லாமல் பண விநியோகத்தை ஆரம்பத்திலிருந்தே தடுக்க வேண்டும் என்று திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆர்.கே.நகர் தேர்தலில் பண விநியோகத்தை தேர்தல் ஆணையம் அனுமதிக்குமானால், அது மிக கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியது. தேர்தல் ஆணையம் இந்த முறையாவது, குதிரை போன பிறகு லாயத்தை பூட்டுவது போல் அல்லாமல், ஆரம்பத்திலிருந்தே பண விநியோகத்தை தடை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிச.5 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். ஆர்.கே.நகர் தொகுதி அவரது மறைவுக்கு பிறகு அந்த தொகுதி காலியாக உள்ளது. அந்த தொகுதிக்கு 6 மாத காலத்திற்குள் தேர்தல் அறிவிக்க வேண்டும் என விதி உள்ளது. அதன்படி தேர்தல் ஆணையம் ஏப்ரல் 14ஆம் தேதி தேர்தலை நடத்த திட்டமிட்டு அறிவிப்பை வெளியிட்டது. பரபரப்பாக பேசப்பட்ட ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுக சார்பில் டிடிவி தினகரன், திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில் கங்கை அமரன் தேர்தலில் களமிறங்கினர். பணப்பட்டுவாடா புகாரின் காரணமாக ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் டிசம்பர் 21-ம் தேதி ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நவம்பர் 27-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. டிசம்பர் 4-ம் தேதி முடியும் என்றும் வேட்பு மனு பரிசீலனை டிசம்பர் 5-ம் தேதி நடக்கும், வேட்புமனுக்களை வாபஸ் பெற டிசம்பர் 7ம் தேதி கடைசி நாள் என்றும் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 24-ம் தேதி நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.