கோடநாடு விவகாரத்தில் தொடர்புடையவர்கள் ஜாமீனில் வெளிவர திமுகவினர் உதவியதாக முதலமைச்சர் பழனிசாமி குற்றஞ் சாட்டியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை மற்றும் பணியாளர்கள் மரணம் தொடர்பாக தெஹல்கா ஊடகத்தின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஒரு வீடியோவை அண்மையில் வெளியிட்டார். அந்த வீடியோவில் மேத்யூஸ், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டுகளை வைத்திருந்த நிலையில், வீடியோ விவகாரம் தொடர்பாக சயன் மற்றும் மனோஜ் ஆகியோர் மீது சென்னை காவல்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து டெல்லி சென்ற மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தினர். ஆனால் அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி மறுத்துவிட்டார். பின்னர் நீதிபதியின் உத்தரவின் பேரில் கடந்த 18 ஆம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் இருவரும் விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது இருவரும் தங்களுக்கு ஜாமீன் வழங்குமாறு நீதிபதியிடம் கோரிக்கை வைத்தனார்.
ஆனால் அதனை ஏற்க மாஜிஸ்திரேட் மறுத்துவிட்டார். ஜாமீன் வழங்க வேண்டுமென்றால் மாலை ஐந்தே முக்கால் மணிக்குள் ஜாமீன் உத்தரவாதம் வழங்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இருவரும் தலா 10 ஆயிரம் ரூபாய் மற்றும் தனிநபர் ஜாமீன் உத்தரவாதம் வழங்கவும் உத்தரவிட்டார். பின்னர் ரூ.10 ஆயிரம் பிணைத்தொகை மற்றும் தனிநபர் உத்தரவாதம் இரண்டையும் நீதிமன்றத்தில் சமர்பித்ததால், இருவருக்கும் நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இந்நிலையில் கோடநாடு வீடியோ விவகாரத்தில், கூலிப்படையைச் சேர்ந்தவர்களுக்கு திமுக ஜாமீன் எடுத்து கொடுத்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதாரத்துடன் குற்றஞ்சாட்டியுள்ளார். நெல்லையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவில் பேசிய அவர், “கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் செய்பவர்களுக்கு எல்லாம் எதிர்க்கட்சி துணை நிற்கின்றது. இதனை மக்கள் எண்ணி பார்க்க வேண்டும்.
மேலும் முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியனின் போட்டோகிராபரும் 170ஆவது வட்டச் செயலாளராக இருக்கக்கூடிய சுந்தர் ராஜன், ஸ்டாலின் உடன் புகைப்படத்திலிருக்கும் மோகன்குமார், கதிர்வேல் ஆகியோருக்கு திமுகவினர்தான் ஜாமின் வழங்கி தந்துள்ளனர்.
கூலிப்படைக்கு துணைபோகும் எதிர்க்கட்சித் தலைவர் எப்படி நாட்டுக்கு நல்லது செய்வார் என மக்கள் எண்ணி பார்க்க வேண்டும்?” என்ற முதல்வர், மேடையிலேயே புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டார். மேலும் கோடநாடு விவகாரத்தில் திமுக நாடகமாடுவதாக குற்றஞ்சாட்டிய முதலமைச்சர், இது தொடர்பாக முழு விசாரணையை அரசு மேற்கொள்ளும் என்றார்.