சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது திமுக மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சி தொண்டர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, இரு தரப்பினரும் புகார் அளிக்க நள்ளிரவு காவல் நிலையம் முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அமைந்தகரை பகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மத்திய சென்னை வேட்பாளர் தெஹலான் பாகவிக்கு ஆதரவாக அக்கட்சி தொண்டர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போது, திமுகவினர் தயாநிதி மாறனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு, பின்னர் கைகலப்பாக மாறியதாக தெரிகிறது.
திமுக நிர்வாகிகள் 10 பேர் எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்த பெண்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியினர் அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதை அறிந்த திமுகவினர் இரவு 10 மணிக்கு மேல் காவல் நிலையம் வந்து அவர்கள் கொடுத்தது பொய் புகார் என கூறி காவல் நிலையம் முன்பு குவிந்தனர்.
மற்றொரு புறம் எஸ்.டி.பி.ஐ மற்றும் அமமுக தொண்டர்களும் காவல் நிலையம் முன்பு குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.