டிரெண்டிங்

பாப்பிரெட்டிப்பட்டி வாக்குச்சாவடியில் முறைகேடு? - தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்

பாப்பிரெட்டிப்பட்டி வாக்குச்சாவடியில் முறைகேடு? - தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்

rajakannan

தருமபுரி மாவட்டம் நத்தமேடு கிராமத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவில் முறைகேடு நடைபெற்றதாக புகார் கூறியுள்ள திமுகவினர் குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். 

தருமபுரி மக்களவைத் தொகுதி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்டது நத்தமேடு கிராமம். இங்கு வாக்களிக்க வந்த வாக்காளரின் கையில் மையை மட்டும் வைத்து அனுப்பிவிட்டு, குறிப்பிட்ட கட்சியினரும், அவர்களது முகவர்களுமே வாக்களித்ததாகப் புகார் எழுந்துள்ளது. 

சிசிடிவி கேமராவை வேறு பக்கம் திருப்பிவிட்டு குறிப்பிட்ட கட்சியின் சின்னத்திற்கு மட்டுமே வாக்களிக்கப்பட்டதாக தெரிகிறது. முறைகேடு புகார் எழுந்ததால் வாக்குப்பதிவின் போது நத்தமேடு வாக்குச்சாவடியை தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி பலமுறை ஆய்வு செய்தார். 

அதையும் மீறி அங்கு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தருமபுரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். நத்தமேட்டில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 2016 சட்டமன்றத் தேர்தலிலும் நத்தமேடு வாக்குச்சாவடியில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

திமுக வழக்கறிஞர் அணி சார்பாக தேர்தல் அதிகாரியிடம் வழக்கறிஞர் நீலகண்டன் புகார் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் பூத் சிலிப் மட்டும் வைத்து பா.ம.க வாக்களித்து இருக்கிறது. 10 வாக்குச்சாவடி மையத்தில் இதுபோல் நடந்துள்ளது. நத்தமேடு பகுதியில் நடந்துள்ளது. மறு வாக்குப்பதிவு நடத்த கோரியுள்ளோம். அதேபோல் சிசிடிவி கேமிரா பயன்பாடு இல்லாமல் இருந்த நிலை குறித்தும் புகார் தெரிவித்துள்ளோம். மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்டு நடவடிக்கை எடுப்போம் எனத் தலைமை தேர்தல் அதிகாரி சாஹூ எங்களிடம் கூறியுள்ளார்” என்றார்.