கர்ப்பிணிக்கு அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி.ரத்தம் ஏற்றப்பட்ட விவாகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
எச்.ஐ.வி. தொற்று இருந்த ரத்தம் செலுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ள சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணி, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் முதல் தளத்தில் வைத்து, தனி அறையில் அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு, மகப்பேறு மருத்துவ தலைவர் சாந்தி தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். மகப்பேறுக்கான சிகிச்சையும், எச்.ஐ.வி. நோய் எதிர்ப்பு சிகிச்சையும் அளிக்கப்படுவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “தன்னார்வலர்கள் மூலம் பெறப்படும் ரத்தங்களையும் முறையாக சோதித்து ரத்த வங்கிகளில் சேர்க்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பான முறையில் ரத்தம் சேகரிக்கப்படுகிறது என விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கர்ப்பிணிக்கு அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி ரத்தம் செலுத்தியது அரசு நிர்வாகம் நிலைகுலைந்ததற்கு சாட்சி. எச்.ஐ.வி ரத்தம் செலுத்திய விவகாரத்தில் சுகாதாரத்துறை உயரதிகாரிகளை மாற்ற வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் ரத்தம் ஏற்றப்பட்ட அனைவரையும் சோதித்ததாக தெரியவில்லை. தற்போதையே நிலையே நீடித்தால் அரசு மருத்துவமனையை நாடவே மக்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டு விடும். அரசு மருத்துவமனைகள் மீது நம்பிக்கை ஏற்படுத்த ரத்த வங்கிகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். சுகாதாரத்துறைக்கு திறமையான அதிகாரியை நியமிக்க வேண்டும். கர்ப்பிணிக்கு அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி.ரத்தம் ஏற்றப்பட்ட விவாகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். 6 வருடத்திற்கு மேல் சுகாதாரத்துறையில் இருந்து நிர்வாக தோல்விக்கு காரணமான செயலர் ராதாகிருஷ்ணனையும் மாற்ற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.