டிரெண்டிங்

“மோடி அரசுக்கு பாடம் புகட்ட வா” - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

“மோடி அரசுக்கு பாடம் புகட்ட வா” - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

webteam

இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வா என கட்சியினருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு  மு.க.ஸ்டாலின், முதன்முறையாக பொதுக்குழுவில் பேசினார். என் உயிரினும் மேலான கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளே என தனது உரையை ஸ்டாலின் தொடங்கினார். தான் கலைஞர் இல்லை; கலைஞரைப் போல் தன்னால் பேச முடியாது எனக் கூறிய ஸ்டாலின் தலைவர் பொறுப்பை அனைவரின் அன்போடும், ஆதரவோடும் ஏற்றுக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். வாழ்நாள் முழுவதும் உழைப்பு - உழைப்பு - உழைப்பு என்றுதான் வாழ்வேன் என்றும், எதையும் முயன்று பார்க்கக்கூடிய துணிவு தனக்கு உள்ளது என்றும் ஸ்டாலின் கூறினார்.

தமிழகத்தில் சுயமரியாதைக் கொள்கைகளுக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது எனக் கூறிய ஸ்டாலின், மக்களாட்சியின் மதச்சார்பற்ற தன்மையைக் குலைக்க முயற்சிகள் நடக்கின்றன என்றும், சமூகத் தீமைகளை அகற்றுவதே முதல் கடமையாக இருக்கும் என்றும் தெரிவித்தார். சுயமரியாதை, சமத்துவம் ஆகியவற்றிலிருந்து ஒருபோதும் பின் வாங்கப் போவதில்லை என சூளுரைத்த ஸ்டாலின், நாடு முழுவதையும் காவி மயமாக்கும் மோடி அரசுக்கு முடிவு கட்ட வா என தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார். 

திமுகவின் மரபணுக்களோடு புதிய எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இன்று தான் புதிதாய் பிறந்திருக்கிறேன் என ஸ்டாலின் கூறினார். தனி மனித, ஊடக கருத்துச் சுதந்திரத்தை மீட்டெடுத்தல் தனது நீண்ட கனவின் சில துகள்கள் என்றும் அதனை தொண்டர்களுடன் இணைந்தே நிறைவேற்ற இயலும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். தலைமைக்கு கட்டுப்பட்டவர்களாக அனைவரும் இருக்க வேண்டும், தொண்டர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி தலைமை இருக்கும் என்றும் ஸ்டாலின் உறுதி அளித்தார்.