டிரெண்டிங்

“வருமான வரித்துறையினர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்; மோடிக்கு நன்றி” - ஆர்.எஸ்.பாரதி

“வருமான வரித்துறையினர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்; மோடிக்கு நன்றி” - ஆர்.எஸ்.பாரதி

rajakannan

வருமானவரி சோதனைக்கு ஏற்பாடு செய்த பிரதமர் மோடிக்கு நன்றி என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

வருமான வரித்துறையினரின் சோதனை முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் குடும்ப செலவுக்காக ரூ.1.36 லட்சம் மட்டுமே இருந்தது. துருவித் துருவி சோதனை செய்ததில் கிடைத்த ரூ.1.36 லட்சத்தை திருப்பித் தந்துவிட்டு சென்றுவிட்டார்கள். 

செந்தில் பாலாஜி வீட்டில் நடத்திய ஐ.டி. ரெய்டில் ரூ.8,000 மட்டுமே கிடைத்துள்ளது. அப்பழுக்கற்றவர்களாக அரசியலில் இருந்திருக்கிறோம்; மடியில் கனம் இல்லை, வழியில் பயம் இல்லை.ஒரு கட்சி கொடுத்த அழுத்தம் காரணமாக பாஜக அரசு இந்த சோதனையை நடத்தியுள்ளது. வருமானவரி சோதனைக்கு ஏற்பாடு செய்த பிரதமர் மோடிக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.

திமுகவினர் இடங்களில் மெகா ரெய்டு:

சென்னை நீலாங்கரையில் உள்ள ஸ்டாலின் மகள் செந்தாமரையின் வீட்டில் வருமான வரித்துறையினர் 12 மணி நேர சோதனை நடத்தினர். இதையறிந்த திமுக தொண்டர்கள் நீலாங்கரை வீட்டின் முன் குவிந்தனர். இதனிடையே திமுக மூத்த வழக்கறிஞரும் எம்.பி.யுமான வில்சன், என்.ஆர்.இளங்கோ, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி உள்ளிட்டோர் செந்தாமரையின் வீட்டின் அருகே ஆலோசனையில் ஈடுபட்டனர்.

அதேசமயத்தில் அண்ணாநகர் தொகுதி திமுக வேட்பாளர் மோகன் மற்றும் அவரது மகன் கார்த்திக், கார்த்திக் நண்பர் ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவன உரிமையாளர் பாலா ஆகியோருக்கு சொந்தமான இடங்களிலும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதையறிந்த திமுக தொண்டர்கள் அண்ணா நகரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக், ராயனூரில் உள்ள திமுக நகரச் செயலாளர் தாரணி சரவணன் ஆகியோரின் வீடுகளிலும், திருவண்ணாமலை எம்.பி அண்ணாதுரையின் வீட்டிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். திருவையாறு தொகுதி வேட்பாளர் துரை சந்திரசேகரனின் ஆதரவாளரும் தஞ்சை திமுக வடக்கு ஒன்றியச் செயலாளருமான முரசொலி என்பவருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்றது.

பிரபல தனியார் மதுபான ஆலை உரிமையாளர் ஜெயமுருகனுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்றது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கதை வசனம் எழுதிய உளியின் ஓசை, பெண் சிங்கம் திரைப்படங்களுக்கு தயாரிப்பாளராக இருந்தவர் ஜெயமுருகன். அவரது அலுவலகத்தில் 2019ஆம் ஆண்டிலேயே ரெய்டு நடத்தப்பட்டத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. இதேபோல், சிவகாசியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நெருங்கிய நண்பர் சீனிவாசனின் வீட்டிலும் ஒரு மணி நேரம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

தமிழகத்தில் ரெய்டு - வருமான வரித்துறை விளக்கம்

3 குழுமங்கள், தனி நபர்களுக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் வரி ஏய்ப்பு ஆவணங்கள் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட இடங்களில் ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும், சில குழுமங்கள், தனிநபர்கள் அரசியலில் பண விநியோகத்தில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது என்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.