சட்டப்பேரவையில் பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரி திமுக எம்பிக்கள் குடியரசுத் தலைவரை இன்று சந்திக்க உள்ளனர். அப்போது அவர்களுடன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மா, மார்க்சிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா உள்ளிட்டோரும் உடன் செல்ல உள்ளனர்.
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் கடந்த 22-ஆம் தேதி ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து தனித்தனியாக கடிதம் கொடுத்திருந்தனர். அதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கான ஆதரவை திரும்பப்பெறுவதாக அவர்கள் கூறியிருந்தனர். இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை உடனடியாக சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடவேண்டும் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு எதிர்க்கட்சித் தலைவர்
மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். ஆனால், அதன் மீது ஆளுநர் அதிகாரபூர்வமாக பதில் எதுவும் கூறாத நிலையில் தற்போது அடுத்த கட்ட நடவடிக்கையாக திமுக எம்பிக்கள் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் நேரில் முறையிட உள்ளனர். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் முக.ஸ்டாலின் இந்த தகவலை உறுதிபடுத்தினார்.