டிரெண்டிங்

‘முதுகெலும்பு இருப்பதால் பேசுகிறேன்’ - ரவீந்திரநாத்தை விமர்சித்த டி.ஆர்.பாலு

‘முதுகெலும்பு இருப்பதால் பேசுகிறேன்’ - ரவீந்திரநாத்தை விமர்சித்த டி.ஆர்.பாலு

rajakannan

முதுகெலும்பு உள்ளவர்களுக்காகவே மக்களவை உள்ளதாக அதிமுக எம்பி ரவீந்திரநாத்தை திமுக எம்பி டி.ஆர்.பாலு விமர்சித்தார்.

370 பிரிவின் கீழ் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நேற்று ரத்து செய்தது. ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் இரு யூனியன் பிரதேசமாக செயல்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். இதனையடுத்து, ஜம்மு-காஷ்மீர், லடாக் என பிரிப்பதற்கான மசோதா நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இன்று மக்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது திமுக எம்.பி, டி.ஆர். பாலு ஜம்மு- காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். 

இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஏன் தெரியப்படுத்தவில்லை என்று டி.ஆர்.பாலு காட்டமாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது அதிமுக எம்.பி ரவீந்திரநாத் குறுக்கிட்டு பேச முயன்றார். பாஜக ஆதரவு எம்.பிகளும் எதிர் முழக்கமிட்டனர். இதனையடுத்து, தன்னை பேச விடுங்கள், குறுக்கிடாதீர்கள் என அவர் வலியுறுத்தினார். டி.ஆர்.பாலுக்கு ஆதரவாக குறுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கனிமொழியும் பேசினார். 

மீண்டும் பேசிய டி.ஆர்.பாலு, முதுகெலும்பு உள்ளவர்களுக்காகவே மக்களவை உள்ளதாகவும், உங்களைப் போன்றவர்களுக்கு இல்லை என ரவீந்திரநாத்தை விமர்சித்தார். அப்போது, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்பிக்கள் சிரிப்பொலி எழுப்பினர்.