டிரெண்டிங்

எண்ணூர் கழிமுகப்பகுதியில் திமுக எம்.பி கனிமொழி ஆய்வு

எண்ணூர் கழிமுகப்பகுதியில் திமுக எம்.பி கனிமொழி ஆய்வு

webteam

எண்ணூர் கழிமுகப் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், அந்தப் பகுதியில் திமுக எம்பி கனிமொழி ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம் எண்ணூரில் கொசஸ்தலை ஆற்றின் கழிமுகப் பகுதி சுருங்கிவிட்டதாகவும், அந்தப் பகுதியில் அனல் மின்நிலைய சாம்பல் கொட்டப்பட்டு சூழலியல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்தப் பகுதியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆய்வு நடத்தினார்.

எண்ணூரில் நிலக்கரி கொட்டி வைக்கப்படும் கிடங்கை பார்வையிட்ட அவர் புழுதிவாக்கம், அத்திப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் சந்தித்து வரும் பிரச்னைகளையும் கேட்டறிந்தார். அதன் பின்பு அனல் மின்நிலைய சாம்பல் கொட்டப்படும் இடத்தையும் அவர் ஆய்வு செய்தார். அதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  இங்கு கொட்டப்படும் சாம்பல் கழிவுகளால் இந்த பகுதி மக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது என்று கூறினார். மேலும் எண்ணூர் கழிமுகப்பகுதி சாம்பல் கழிவுகளால் மாசு அடைந்து காணப்படுகிறது என்று கூறிய அவர், பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் முன்பு இந்த இடத்தை மீண்டும் பார்வையிட்டு பிரச்சனைகள் பற்றி தெளிவாக அறிய வந்துள்ளதாக தெரிவித்தார்.