டிரெண்டிங்

அரசு விழாவில் பங்கேற்கச் சென்ற திமுக எம்எல்ஏ-க்கள் கைது

அரசு விழாவில் பங்கேற்கச் சென்ற திமுக எம்எல்ஏ-க்கள் கைது

Rasus

அரசு அழைப்பிதழின் பேரில் புதுக்கோட்டை புதிய மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவிற்குக் கிளம்பிய திமுக எம்எல்ஏ-க்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டையில் நடைபெற்ற புதிய மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டடத் திறப்பு விழாவில் பங்கேற்கச் சென்ற திமுக எம்எல்ஏக்கள் பெரியண்ணன் அரசு, ரகுபதி, மெய்யழகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அரசு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததால், மாவட்ட திமுக அலுவலகத்தில் இருந்து திமுக எம்எல்ஏ-க்கள் தங்களது வாகனங்களில் புறப்பட்டிருக்கின்றனர். அந்த நேரம் அங்கு வந்த போலீசார், அவர்களை நீங்கள் விழாவிற்கு செல்லக் கூடாது என கைது செய்திருக்கின்றனர். எங்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் ஏன் செல்லக்கூடாது என திமுக எம்எல்ஏ-க்கள் கேட்க, நீங்கள் வந்தால் கலாட்டா நடைபெறும் எனவே உங்களை கைது செய்கிறோம் என போலீசார் தெரிவித்ததாக கூறினார் எம்எல்ஏ ரகுபதி.

அவர் மேலும் கூறுகையில், "மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக அமைச்சர் விஜயபாஸ்கர் எங்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்தார். போதா குறைக்கு, வட்டாட்சியரும் நேரில் வந்து, அழைப்பிதழை எங்களிடம் வழங்கிவிட்டு சென்றார். இதனால் தான் நாங்கள் செல்ல முயற்சித்தோம். ஆனால் ஆளும் அதிமுக பினாமி அரசு, அழைப்பு விடுப்பது போல் விடுத்து நல்ல பெயரை வாங்கிவிட்டு, போலீஸ் மூலம் எங்களை தடுத்து நிறுத்தி கைது செய்துவிட்டது. நாங்கள் எந்த பிரச்னையும் செய்யாத போது, போலீசாரே எங்களால் கலாட்டா ஏற்படும் என நினைப்பது எந்தவிதத்தில் நியாயம். மேடையில் நாங்கள் அமர்ந்தால் திமுக-விற்கு நல்ல பெயர் வந்துவிடும் என்ற கெட்ட எண்ணத்தில், ஆளும் அரசு எங்களை போலீசார் மூலம் கைது செய்து விட்டது" என்றார்

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு சார்பில் புதிய மருத்துவக் கல்லூரி கட்ட ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும் போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, 127 ஏக்கரில் ரூபாய் 232 கோடி செலவில் புதிய மருத்துக் கல்லூரியும் கட்டப்பட்டது. இதற்கான திறப்பு விழா இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்க்கட்சியான திமுக-வின் எம்எல்ஏ-க்களுக்கும் விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்து.

பொதுவாகவே, ஆளுங்கட்சி சார்பில் நடத்தப்படும் எந்த ஒரு அரசு விழாக்களின் போதும், எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு செல்வதில்லை. முதலமைச்சராக ஜெயலலிதா இருந்த போது பல்வேறு திட்டங்களை தொடங்கி செயல்படுத்தி வைத்திருக்கிறார். இதில் ஒரு சில திட்டங்கள், முக்கிய எதிர்க்கட்சியான திமுக ஆளுங்கட்சியாக இருந்தபோது தொடங்கப்பட்டிருந்தாலும், ஆட்சி மாறி ஜெயலலிதா திறந்து வைப்பதற்கான சூழல் ஏற்படும் போது, திமுக-விற்கு அழைப்பு செல்லாது. ஆனால் தற்போது முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். இந்த சூழலில் தான் ரூ.232 கோடி செலவில் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டட திறப்பு விழா இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. விழாவுக்காக அரசு சார்பில் அச்சிடப்பட்ட விளம்பரங்களின் பெயர்களிலும், திமுக எம்எல்ஏ-க்களான பெரியண்ணன் அரசு, ரகுபதி, மெய்யழகன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தமாக 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் மூன்று, திமுக கைவசம் உள்ளது. எனவே மூன்று திமுக எம்எல்ஏ-க்களும் அழைப்பு சென்றிருக்கிறது.

அவர்கள் மூவரும் ஒருபுறமும் கைது செய்யப்பட, மறுபுறம் அரசு விழா சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. விழாவுக்கு திமுக எம்எல்ஏ-க்களுக்கு அழைப்பு விடுத்த அமைச்சர்களும், திமுக எம்எல்ஏ-க்கள் கைது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.