டிரெண்டிங்

உள்ளாட்சி துறை அமைச்சர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு

webteam

உள்ளாட்சி பணிகளுக்கு மத்திய நிதியாணையம் ஒதுக்கீடு செய்துள்ள நிதிமானியம் தவறாக பயன்படுத்தப்படுவதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், 14வது மத்திய நிதியாணைய பரிந்துரையின் அடிப்படையில் 2017-18 ஆம் ஆண்டிற்கான ஆயிரத்து 390 கோடி ரூபாய் அடிப்படை மானியம் ஒதுக்கப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளார். இதன்படி மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு 448 கோடி ரூபாய் மானியத்தை மாநில நகராட்சி நிர்வாக ஆணையர் ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அந்த தொகையை நிலுவையில் உள்ள மின்கட்டணம் மற்றும் குடிநீர் கட்டணத்திற்கு மாநகராட்சிகள், நகராட்சிகள் செலுத்த வேண்டும் என்றும் ஆனால் கான்டிராக்ட் பணிகளுக்கு நிதியை முழுவதும் பயன்படுத்துங்கள் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி நெருக்கடி கொடுப்பதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

டெங்கு பீதியால் மக்கள் உறைந்து போயிருக்கும் நேரத்தில் அடிப்படை மானியத்தை திசைதிருப்பும் அமைச்சரின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது என அவர் கூறியுள்ளார். ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நகராட்சி, குடிநீர் வழங்கல் துறை செயலாளர்கள் நிதி செலவிடும் விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் தொடர அனுமதிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி உள்ளார்.