புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூரில் கடந்த 24ஆம் தேதி திமுக பிரமுகர் பாலச்சந்திரன் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதிமுகவை சேர்ந்த முக்கிய குற்றவாளிகள் 3 பேர் உட்பட 10 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூரைச் சேர்ந்தவர் பாலச்சந்திரன் (36). இவர் மீது புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர், மண்டையூர், திருச்சி மாவட்டம் கண்டோன்மென்ட் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 7 வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதுமட்டுமின்றி பாலச்சந்திரன் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டப் பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இவர் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளராகவும் உள்ளார். இவருக்கு வருகின்ற 30ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 24ஆம் தேதி மாத்தூரில் உள்ள தனது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் உள்ள மாட்டுக் கொட்டகையில் மாடுகளுக்கு பூஜை செய்யும் பணியில் பாலச்சந்திரன் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு காரில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் பத்துக்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர்.
இதைப் பார்த்த பாலச்சந்திரன் அங்கிருந்து தனது காரில் தப்பிச் செல்ல முயன்றுள்ளார். ஆனால் அவரை விரட்டி மடக்கிய மர்ம கும்பல் பாலச்சந்தினை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பாலச்சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து மாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து பாலச்சந்திரன் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே பாலச்சந்திரனை கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டுமென அவரது உறவினர்கள் சிறிது நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களோடு பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதாக கூறியதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட பாலச்சந்திரன் பல்வேறு வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும், அவர் மீது பல வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ள நிலையில் ரியல் எஸ்டேட் கட்டபஞ்சாயத்து உள்ளிட்ட செயல்களிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து கடந்த 25ஆம் தேதி நடைபெற்ற பாலச்சந்திரன் இறுதி ஊர்வலத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர். மேலும் திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, ரகுபதி உட்பட ஆயிரக்கணக்கானோர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து பாலச்சந்திரன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த அவரது முன்னாள் நண்பர்களான பாலமுத்து, முருகானந்தம், நந்தகுமார் உட்பட 15க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து 4 தனிப்படை அமைத்து அவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் பாலச்சந்திரன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் அதிமுகவை சேர்ந்த பாலமுத்து, முருகானந்தம் மற்றும் நந்தகுமார் உட்பட 10 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். திமுக பிரமுகர் கொலை வழக்கில் அதிமுகவை சேர்ந்தவர்கள் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.