பிறந்த நாளை முன்னிட்டு தன்னைப் பார்க்க வந்த தொண்டர்களைப் பார்த்து திமுக தலைவர் கருணாநிதி கையசைத்தார். இதனால் அவர்கள் உற்சாகமடைந்தனர்.
திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதிக்கு இன்று 95ஆவது பிறந்த நாள். இதனை முன்னிட்டு, சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லம் விழாக்கோலம் பூண்டுள்ளது. வீட்டின் வெளியே ஏராளமான வாழை மரங்கள், தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. வண்ண விளக்குகளால் வீடு அலங்கரிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மூத்த அரசியல் தலைவரான கருணாநிதிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவிக்க, திமுக தொண்டர்கள் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு வெளியே குவிந்த வண்ணம் உள்ளனர். திமுக தொண்டர்கள் இனிப்புகளை பரிமாறி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் கோபாலபுரம் இல்லத்துக்கு வெளியே குவிந்த திமுக தொண்டர்களை பார்த்து கருணாநிதி கையசைத்தார். இதனால் தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்.
கருணாநிதிக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், தமிழக பாஜக தலைவர் தமிழிசை, மதிமுக தலைவர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.