எஸ்.வி.சேகரை கைது செய்யாதது வியப்பளிப்பதாக திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் “பெண் பத்திரிக்கையாளர்களை இழிவாக சித்தரித்து முகநூலில் பதிவிட்ட பிஜேபி உறுப்பினர் எஸ்வி.சேகரின் முன் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த பின்னும், காவல்துறை அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வியப்பளிக்கிறது. இழிவாக ஒரு பதிவு செய்துவிட்டு, பின்னர் அதை நீக்குவதும், வருத்தம் தெரிவிப்பதும் வழக்கமாகி வருகிறது.விமர்சனம் செய்ய அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது, ஆனால் அவதூறு செய்ய அல்ல. காவல்துறை இவ்விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்." எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, நடிகரும், பாஜகவை சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசும் விதத்தில் சர்ச்சை கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனக் குரல்கள் எழுந்தன. இதனையடுத்து பெண் பத்திரிகையாளர்கள் குறித்து பதிவிடப்பட்ட கருத்திற்கு நடிகர் எஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்டார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், நண்பர் ஒருவர் எழுதிய பதிவை படிக்காமல் முகநூல் பக்கத்தில் பார்வேர்டு செய்துவிட்டதாக குறிப்பிட்டிருந்தார். மற்றொரு நண்பர் அதனை படித்துவிட்டு தவறாக இருக்கிறது என தெரிவித்த உடனேயே அதனை ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டதாகவும் விளக்கம் கொடுத்தார். இந்நிலையில் பத்திரிகையாளர் பாதுகாப்பு நலச்சங்கத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் எஸ்.வி.சேகர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 4 பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.