திமுக தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோர் வரும் 26ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவின் பொதுக் குழுக் கூட்டம் வருகிற 28ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ளார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என்றும் தணிக்கைக் குழு அறிக்கை தாக்கலாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திமுக தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோர் வரும் 26ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யலாம் என கட்சியின் பொதுச் செலயாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி தலைவர், பொருளாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் 26-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திமுக தலைமைக் கழகத்தில் வேட்பு மனுவினை தாக்கல் செய்யலாம். வேட்புமனுவினை திரும்பப் பெற 27-ஆம் தேதி பிற்பகல் 1.30 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 27-ஆம் தேதி மாலை 5 மணியளவில் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். 28-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.