தமிழகத்தில் ஆளும் கட்சி குறை சொல்வதாகவும், எதிக்கட்சியான திமுக பணி செய்வதாகவும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கட்சித் தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள மடலில், மழை பாதிப்பில் மக்களின் துயரம் பற்றிக் கவலைப்படாமல் எதிர்க்கட்சியினரை விமர்சிப்பதிலேயே ஆளும் கட்சியினர் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். நீர்நிலைகள் முழுமையாக தூர்வாரப்படவில்லை என்று கூறியுள்ள ஸ்டாலின், மராமத்துப் பணிகளை முறையாகச் செய்திருந்தால் மழைநீர் வீணாவதை தடுத்திருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களின் உள்ளங்களில் ஆட்சி செய்வது திமுகதான் என்றும், அதனால்தான் தமது வேண்டுகோளை ஏற்று திமுகவினர் தங்கள் சொந்த செலவில் தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான நீர்நிலைகளை பருவமழைக்கு முன்பே செப்பனிட்டதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீர்நிலைகளை சீரமைப்பதிலும், நிவாரண உதவிகளை வழங்குவதிலும் முனைப்பாக செயல்படும் திமுகவினருக்கு நன்றி தெரிவிப்பதாகவும், இந்தச் செயல்பாடுகள் தொடரட்டும் என்றும் மடலில் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தை ஆளும் அரசாங்கத்தினர், தோல்வி பயத்தால் உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.