குட்கா விவகாரம் மற்றும் ஒபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ-க்களுக்கு எதிரான வழக்கு விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் நவம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. இந்த வழக்குகளை கூடுதல் அமர்வுக்கு மாற்றுவது குறித்தும் அன்றைய தினம் முடிவு அறிவிக்கவுள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
குட்கா விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் 21 பேருக்கு உரிமைக் குழு நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு கொறடாவின் உத்தரவை மீறி செயல்பட்ட ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக கொறடா சக்கரபாணி தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அரசு கொறடா உத்தரவை மீறி வாக்களித்த ஒ.பன்னீர்செல்வம், பாண்டியராஜன் ஆகியோர் அமைச்சர்களாக செயல்படுவதற்கு எதிராக திமுக எம்எல்ஏ பிச்சாண்டி தொடர்ந்த கோவாரண்ட் வழக்கும் நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன், ஒபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.களுக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் எனவும், செம்மலை அளித்த மனுவை ஏற்க வேண்டும் எனவும் வாதாடினார். தாமே இந்த வழக்கினை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றுவது குறித்து பரிசீலித்து வருவதாகக் கூறிய நீதிபதி, வழக்கு விசாரணையை நவம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தில் செம்மலை தொடர்ந்த அந்த வழக்கில், தற்போதைய நிலை குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் அன்றைய தினம் தெரிவிக்க வேண்டும் எனக் கூறினார். உரிமைக் குழு நோட்டீசுக்கு எதிரான வழக்கு, துணை முதல்வருக்கு எதிரான வழக்குகளை கூடுதல் அமர்வுக்கு மாற்றுவது குறித்து நவம்பர் 2ஆம் தேதி முடிவு எடுக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.