டிரெண்டிங்

ரெய்டு பூச்சாண்டிக்கு திமுக பயப்படாது: துரைமுருகன்

JustinDurai

ரெய்டு போன்ற பூச்சாண்டி வேலைக்கெல்லாம் திமுக பயப்படாது என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை நீலாங்கரையில் உள்ள செந்தாமரை வீடு உள்பட 4 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்புதான் திமுக வேட்பாளர் எ.வ வேலு வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் திமுகவின் முக்கிய பிரமுகர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு சொந்தமான 5 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

வருமான வரித்துறையினரின் இந்த சோதனைக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''தேர்தல் நேரத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இது பாஜக கூட்டணியின் தோல்வி பயத்தின் விளைவு என்பதை காட்டுகிறது. இது ஜனநாயகமான போக்கு அல்ல; நாணயமான அரசியல் அல்ல. ரெய்டு போன்ற பூச்சாண்டி வேலைக்கெல்லாம் திமுக பயப்படாது.

பாஜக கூட்டணி கட்சிகள் மீதான வருமான வரித்துறை சோதனை கண்துடைப்புக்காக நடத்தப்படுகிறது. ஆனால் திமுக மீதான ரெய்டு, பழிவாங்கும் நடவடிக்கைக்காக நடத்தப்படுகிறது. அடக்குமுறைகள், வழக்குகள், அவதூறுகளை தவிடுபொடியாக்கி வந்த இயக்கம் திமுக'' என்றார்.