திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து கோடநாடு வீடியோ குறித்து முறையிட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை மற்றும் பணியாளர்கள் மரணம் தொடர்பாக தெஹல்கா ஊடகத்தின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஒரு வீடியோவை அண்மையில் வெளியிட்டார். இது வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியது. அந்த வீடியோவில் மேத்யூஸ், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தச் சூழலில், வீடியோ தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி திமுக தலைவர் ஸ்டாலின், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை 5.30 மணிக்கு சந்தித்துள்ளார். அப்போது, பத்திரிகையாளர் மாத்யூ வெளியிட்ட கோடநாடு நிகழ்வுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது அரசியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், நேர்மையான ஐ.ஜி. தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக்குழுவை ஏற்படுத்தி மேல் விசாரணை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி, எம்.பி., கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி - எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.பி., கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.இராசா ஆகியோர் உடனிருந்தனர்.
இந்தச் சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “திமுக சார்பில் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. நேர்மையான ஐஜி ஒருவர் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். பாரபட்சமற்ற சுதந்திரமான விசாரணை நடைபெற வேண்டும்.
கோடநாடு வீடியோவில் முதல்வரை தொடர்புபடுத்தி குற்றம்சாட்டியுள்ளார்கள். இந்த விவகாரம் குறித்து குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் தெரிவிக்க வேண்டும். எஞ்சியிருக்கும் ஆதாரங்களை அழிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. கனகராஜ் மரணம் விபத்துதான் என வழக்கை விசாரித்த முரளி ரம்பாவை இன்று பேட்டி அளிக்க வைத்துள்ளனர். எங்களின் கோரிக்கையை கேட்ட ஆளுநர், நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். கோடநாடு பங்களா தனியார் இடமாக இருக்கவில்லை, ஜெயலலிதாவின் முகாம் அலுவலகமாவே செயல்பட்டது. ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் திமுக எம்.பிக்கள் குடியரசுத் தலைவரை சந்தித்து முறையிடுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.