தமிழக அரசு அறிவித்துள்ள அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ள திமுக, தான் அறிவித்த கூட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில், நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட தண்ணீரின் அளவை குறைத்தும், கர்நாடகத்திற்கு தண்ணீர் அளவை கூட்டியும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதனால், தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசியல் கட்சிகள் தெரிவித்து வருகின்றன. திமுக இந்த விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.
இந்நிலையில், காவிரி நதிநீர் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பைத் தொடர்ந்து எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க தமிழக அரசின் சார்பில் 22.02.2018 அன்று அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு திமுக வரவேற்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக அரசே கூட்டத்தை நடத்துவதால், திமுக சார்பில் 23.2.2018 அன்று நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட அனைத்து கட்சி கூட்டம் ரத்து செய்யப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக பங்கேற்று காவிரி நதிநீர் பிரச்னை குறித்து ஆக்கபூர்வமான ஆலோசனைகளை தெரிவிக்கும் என்றும் அனைத்து கட்சிகள் மட்டுமின்றி தமிழக விவசாயிகள் சங்கங்களின் பிரநிதிகளையும் அழைத்துப் பேச வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.