டிரெண்டிங்

திமுக கூட்டணி தொகுதி பங்கீடு: விசிகவுக்கு எத்தனை தொகுதி?

திமுக கூட்டணி தொகுதி பங்கீடு: விசிகவுக்கு எத்தனை தொகுதி?

webteam

மக்களவை தேர்தல் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து பேச இன்று மதியம் 12.30 மணிக்கு வருமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.

மக்களவைத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக-பாஜக-பாமக கூட்டணி உறுதியானது. அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 5 தொகுதிகளும், பாமகவிற்கு 7 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மறுபுறம், காங்கிரஸ் - திமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. புதுச்சேரியில் ஒரு தொகுதி, தமிழகத்தில் 9 தொகுதிகள் என காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும் நேற்று காலை திமுக- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையேயான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கட்டாயமாக 2 தொகுதிகளை கேட்டு கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. கோவை, மதுரை ஆகிய இரண்டு மக்களவை தொகுதிக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

இந்நிலையில் திமுகவின் மற்றொரு கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து பேச  திமுக அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி இன்று மதியம் 12.30 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. 

சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளாதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் விசிகவுக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மதியம் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.