ஹார்வர்டு பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க திமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கவுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழுக்கு கிடைக்க இருக்கும் ஹார்வர்ட் இருக்கை ஒவ்வொரு தமிழருக்கும் பெருமிதத்தையும், பேருவகையையும் நிரந்தரமாக தரும் என்பதில் ஐயமில்லை எனத் தெரிவித்துள்ளார். தமிழ் மொழிக்காக திமுக ஆற்றிய சாதனைகளை பட்டியலிட்ட ஸ்டாலின், உயர்நீதிமன்றத்திலும், மத்திய அரசு அலுவலகங்களிலும் தமிழ் நிச்சயம் ஒருநாள் அரியணை ஏறியே தீரும் எனக் கூறியுள்ளார்.
மேலும் ஸ்டாலின் தனது அறிக்கையில், “தமிழ்மொழி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி பணியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த பங்களிப்பாக, ஹார்வார்டு தமிழ் இருக்கை அமைவதற்கு ஒரு கோடி ரூபாயை வழங்குவது என முடிவெடுக்கப்பட்டுள்ளதை அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
தமிழ் மொழியின் மேம்பாட்டுக்காகவும், முதன்மைக்காகவும் வாழ்நாள் முழுவதும் போராடிக் கொண்டிருக்கும் தலைவர் கலைஞரின் சார்பில் இந்த நிதியை அளிப்பதுடன், அந்த உயரிய இருக்கை விரைவில் அமைந்து, தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்திட வேண்டுமென ஏழரைக் கோடி தமிழர்களின் சார்பாக மனமார வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.