2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுகவும், தேமுதிகவும் 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் நாடாளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி அமைத்துள்ளது. மிக நீண்ட இழுப்பறிக்கு பின்பு அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது தேமுதிக. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் நேற்று மாலை தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
திரைத்துறையில் கோலோச்சிக் கொண்டிருந்த காலக்கட்டத்ததில் 2005 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக ‘தேசிய முற்போக்கு திராவிடக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கினார் விஜயகாந்த். பின்பு 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 232 தொகுதிகளில் தேமுதிக தனித்து போட்டியிட்டது. இதில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் தவிர மற்றவர்கள் அனைவரும் தோல்வியை தழுவினர். விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியிலிருந்து வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினராக நுழைந்தார்.
இதனால் தேமுதிகவை தமிழக மக்கள் திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்றான அரசியல் கட்சியாக பார்த்தனர். மேலும், முக்கியக் கட்சிகளான திமுகவும், அதிமுகவும் அக்கட்சியின் வளர்ச்சியை கண்டு திடுக்கிட்டனர். ஆரம்பத்தில் கூட்டணி குறித்து பேசிய விஜயகாந்த் "தெய்வத்தோடும், மக்களோடும்தான் கூட்டணி" என்று தெரிவித்தார். இதனையடுத்து 2009 இல் நடைபெற்ற மக்களவை தேர்தலிலும் தேமுதிக 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. ஆனால் 40 தொகுதியிலும் தோல்வி கண்டது. ஆனால் 10% வாக்குகள் தேமுதிகவுக்கு கிடைத்து. இது தேமுதிக வளர்ச்சி பாதையில் சென்றதற்கான ஆதாரமாக பார்க்கப்பட்டது. இப்படி மாற்று அரசியலை முன்னெடுக்கும் நபராக பார்க்கப்பட்ட விஜயகாந்த் 2011 இல் ரூட் மாறினார்.
2011 சட்டப்பேரவை தேர்தலில் "தெய்வத்தோடும் மக்களோடும்" கூட்டணியை மறந்து முதல்முறையாக அதிமுகவுடன் கூட்டணி வைத்தார். அந்தத் தேர்தலில் அதிமுக தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில் 29 இல் வெற்றிப் பெற்றது. அந்தத் தேர்தலில் 23 தொகுதிகளில் மட்டுமே திமுக வெற்றிப் பெற்றதால் எதிர்கட்சிக்கான தகுதியையும் இழந்தது. இதனையடுத்து தமிழக சட்டப்பேரவையின் எதிர்கட்சித் தலைவரானார் விஜயகாந்த். இதனால், இரண்டாவது பெரும்பாண்மையுடன் தேமுதிக எதிர்கட்சி அந்தஸ்து பெற்றது.
பின்னர், அதிமுகவுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக தனியாகவும், திமுக ஒரு அணியாகவும் மூன்றாவது அணியாக தேமுதிக தலைமையில், பாஜக, பாமக, மதிமுக ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டது. அதன் பின்பு அதாவது 2011 ஆம் ஆண்டுக்கு பின்பு இப்போதுதான் அதிமுக கூட்டணியில் சேர்ந்துள்ளது தேமுதிக.